
About the Journal
Current Issue

படி நிலைச் சமுதாயம் உடைபடும் தருணம் நோக்கி
மனித சமுதாய வாழ்வைப் பிரதிபலிக்கும் இலக்கியங்களின் ஊடாக அவை நிறுவனப்படுத்தப்படுதலும், அதற்கான அதிகார அரசியலைப் பதிவு செய்தலும் தொடர்ந்து நிகழும் அதே வேளையில், இவற்றுக்கு எதிரான போர்க்குரலை எழுப்புதலும் தொடர்ந்து நிகழ்ந்தேறிய வண்ணமே இருக்கின்றது. கொங்கு வட்டார புதினங்களில் அதிகார இயந்திரங்களும் அடக்கு முறைகளும் என்ற கட்டுரையானது இந்தியச் சமூகத்தில் சாதியப்படி நிலை எவ்வாறு மேற்கொண்டு வியாபித்துள்ளது என்பதைச் சங்ககாலச் சமுதாயம் தொட்டு இன்றைய சமுதாயம் வரை விரிவாக விளக்குகிறது. கொங்கு வட்டார புதினங்கள் வெளிப்படுத்தும் அதிகார அரசியல், சாதிய வன்முறை முதலானவற்றை விளக்கும் போது விளிம்பு நிலை சாதிகளின் தன்னுணர்வு மனநிலை மேல் ஏழாதவாறு அடக்கு முறைக்கு ஆளாக்குகிறது என்று கூறும் கருத்து உற்று நோக்கத்தக்கது. உரத்த குரல் அதிகாரத்துக்கு ஒவ்வாதது, மரியாதை அற்ற வார்த்தைகள் அதிகாரத்தை எதிர்ப்பதற்குச் சமமானது என்பன போன்ற கருத்துக்கள் அதிகாரமயமாதலை தெளிவாக விளக்குகின்றன. இத்தகைய அதிகார மையம் நோக்கி விளிம்பு நிலை மனிதர்கள் நகரும்போதே இந்த அதிகாரம் விளிம்பு நிலை மனிதர்களுக்கு உடைக்கப்படுகிறது என்பதே இன்றைய நிலைப்பாடு.
ஏற்றத்தாழ்வுகளை வேக நுணுக்கமாக கட்டமைத்த நமது சமுதாயத்தில் மொழியின் அரசியல் அளப்பரியது. ஆண் பெண் சரிபாதியாக வாழும் தமிழ்ச் சூழலில் பெண்ணுக்கான மொழி என்பதை இரண்டாம் நிலையா? என்பதை உட்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. மேலும் பெண் வலிமை ஆண் சமுதாயத்திற்கும் இளைய சமுதாயத்திற்கும் உணர்த்தப்பட வேண்டியது அவசியம். இதற்கான முயற்சி தொடர வேண்டும். மேலும் தன்மொழி வழி கற்றல் என்பது மனித சமுதாயத்தை உயர்த்தும் என்பதும் உணர்த்தப்பட வேண்டியதே. தமிழ்ச் சூழலில் மனித மனம் பண்பட இலக்கியங்கள் முன்வைக்கும் மொழியும் உடல் நலம் பெற அவை கூறும் வழக்காறுகளும் பெரும் பங்களிக்கின்றன. இவற்றை ஆய்வுக்குட்படுத்தி மறுவாசிப்புச் செய்து மனித சமுதாயம் மேம்பட பயன்படுத்த வேண்டியது இன்றைய காலத் தேவை.
பதிப்பாசிரியர்